ஓபிஎஸ் குறித்து தவறான முறையில் கேள்வி கேட்காதீர்கள்...! - காண்டான செல்லூர் ராஜு
Dont ask wrong questions about OPS angry Sellur Raju
மதுரை மாவட்டத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ''செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.'' செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்காக மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுகிறார்கள். இதுபோன்ற மக்களின் எழுச்சி எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது சுற்றுப்பயணத்திலும் பார்க்க முடிந்தது. இந்தப் பெருங்கூட்டம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் திரளாக வருவதை பார்க்கும் போது அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
இன்னமும், சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பெரிய பெரிய கட்சிகள் யாரும் எதிர்பார்க்காத கட்சிகள் வரும் என்று பொதுச்செயலாளர் தெரிவித்திருக்கிறார்.ஆகையால், கூட்டணி முக்கியமல்ல, மக்கள்தான் எஜமானர்கள்.
அவர்களது உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,வேறு எந்த இயக்கத்திலும் இதுபோல பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.ஆகையால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சீட் பேரம், தொகுதி பேரம் எல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாட்டில் கூட கூட்டணி பிரியும்.
எனவே கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.1967-ல் பேரறிஞர் அண்ணா யாரும் எதிர்பாராத வகையில் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார். எனவே கூட்டணியை விட மக்களின் ஆதரவு முக்கியம். அதன் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் உங்களை எல்லாம் வழி நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 3 முறை சந்தித்துள்ளார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ஆவேசமடைந்த செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா? என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் 3 முறை அல்லது 4 முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை" என்று காட்டமாக பதிலளித்தார்.
English Summary
Dont ask wrong questions about OPS angry Sellur Raju