அண்ணாமலையும், சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் - விசிக தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு!
VCK Vanniyarasu Condemn to EPS Annamalai Seeman
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய சுப்பாக்கிச்சூட்டில் பலியாகினர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், விசாரணைக் கைதி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது, உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், விசாரணைக் கைதி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அண்ணாமலையும், சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்று விசிக-வை சேர்ந்த வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடி சம்பந்தப்பட்டுள்ள கொலையாளி திருவேங்கடம் காவல்துறை மோதலில் கொல்லப்பட்டுள்ளான்.
காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அதிமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களும், நாதக திரு.சீமான் அவர்களும் ஒரே மாதிரி ஒரே குரலில் கொலையாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
அதாவது, கொலையாளி திருவேங்கடம் நேரடியாக ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அப்படி நேரடி தொடர்பில் உள்ள கொலையாளிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தலித் விரோதப்போக்காகும்.
தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் சொல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்கும் பணியில் ஒன்றிணைவதை தலித் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக, அண்ணாமலையும், சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Vanniyarasu Condemn to EPS Annamalai Seeman