சேலம்: சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி அண்ணனை கொன்ற தம்பி!
Vazhapadi property dispute murder
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சொத்து தகராறில் தம்பி உருட்டுக்கட்டையால் தாக்கியதில், 9 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேஷன்சாவடி பகுதியைச் சேர்ந்த சின்னய்யன் மகன்கள் ராஜேந்திரன் (55) மற்றும் ஆறுமுகம் (45) ஆகிய இருவரும் கூலித்தொழிலாளிகள். இருவருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருந்தும் குடும்ப பிரச்சனையால் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்த இருவருக்கும் சொத்து பங்கீடு தொடர்பாக நீண்டநாள் தகராறு நிலவியது.
அக். 28-ஆம் தேதி, வீடு பங்கீடு குறித்து கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரன் தம்பியிடம் “இங்கிருந்து வெளியேறு” என்று கூறியதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், உருட்டுக்கட்டையால் அண்ணனை தாக்கியுள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு இரு கால்களில் முறிவும் தலையில் தீவிர காயமும் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கடந்த ஒன்பது நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த ராஜேந்திரன், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
வாழப்பாடி போலீஸார் முதலில் தாக்குதல் வழக்காக பதிவு செய்திருந்த நிலையில், ராஜேந்திரன் மரணத்தைத் தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக மாற்றினர். தம்பி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Vazhapadi property dispute murder