வன்னிப்போ் கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
Vanniper old statue
விழுப்புரம்: வன்னிப்போர் கிராமத்தில், 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூத்ததேவி, விஷ்ணு சிற்பங்கள் மற்றும் 10-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் மரக்காணம் சாலையில் அமைந்துள்ள வயல்வெளியில், எழுத்தாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “வன்னிப்போர் சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில், சுமார் 2.5 அடி உயரமுள்ள மூத்ததேவி சிற்பம் மண்ணில் சாய்ந்த நிலையில் உள்ளது.
தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் அமர்ந்துள்ள இந்தச் சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் மனித உருவங்கள் காணப்படுகின்றன. இவ்விடம் ‘தூக்கை மேடு’ என அழைக்கப்படுகிறது. மக்கள் இச்சிற்பத்தைக் தூக்கை அம்மனாகவே வழிபட்டு வருகின்றனர்.
மேலும், ஆசனாம்பாறை எனும் இடத்தில் 5 அடி உயரத்தில் நின்ற நிலையில் விஷ்ணு சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் உள்ள இதில், ஒரு வலது கை அபயமுத்திரையிலும், இடது கை இடுப்பில் வைக்கப்பட்டு காணப்படுகிறது. மற்றொரு கை சேதமடைந்துள்ள நிலையில், இடது கை சங்கு பிடித்தபடி உள்ளது.