தொடரும் சோகம்: பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி!
vaniyambadi school van student death
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வேலு - திலகவதி தம்பதியரின் ஒன்றரை வயது மகன் துருசாந்து, பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திலகவதி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வழக்கம்போல் பள்ளிக்கு அனுப்ப செவ்வாய்க்கிழமை காலை வீட்டையொட்டி வந்து நின்ற பள்ளி வேனில் ஏற்றியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை துருசாந்து தவழ்ந்து வெளியே வந்துள்ளது.
குழந்தை வேனின் வலது பக்கத்தில் இருப்பதை வேன் ஓட்டுநர் விஜயகுமார் கவனிக்காத நிலையில், வேனை இயக்கியுள்ளார். இதில், துருசாந்து வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலூர் போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அலட்சியமாக வேனை இயக்கி குழந்தை உயிரிழப்புக்குக் காரணமான ஓட்டுநர் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோல் தமிழகத்தில் பல சம்பவங்கள் தொடர்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
English Summary
vaniyambadi school van student death