துணை வேந்தர்கள் நியமணம் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைக்கு வைகோ வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு வைகோ பாராட்டு தெரிவித்துளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை, மாநில அரசே தேர்வு செய்ய வகை செய்யும் சட்ட முன்வரைவு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. கல்வித் துறையில் மாநில உரிமையை முற்றாகப் பறிக்கும் நோக்கத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், திமுக அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டுவந்து இருப்பது வரவேற்கத்தக்கது.

சட்டமன்றத்தில் இந்த முன்வரைவை முன்மொழிந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய்ந்து, முன்னாள் நீதிபதி பூஞ்ச் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையில், “அரசு அமைப்புச் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்று பரிந்துரைத்துள்ளது” என்பதை, மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருப்பார்; பல்கலைக் கழகங்களின் தலைமைப் பொறுப்பாளர்களாக துணைவேந்தர்கள் செயல்படுகின்றனர்.

இந்தத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை மாநில அரசு நியமிக்கும்.

இத்தேர்வுக்குழு, துணைவேந்தர் பொறுப்புக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, மூன்று பெயர்களை, ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். ஆளுநர் மாநில அரசுடன் கலந்தாய்வு செய்து, துணைவேந்தரை நியமனம் செய்வார்.

இத்தகைய நடைமுறைகளை மாற்றி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் தேடுதல் குழுவையே நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக்கொண்டார்.

அதுமட்டும் அன்றி, துணைவேந்தர் பதவி நியமனத்திலும் ஆளுநர் விருப்பம்தான் மேலோங்கியது. மாநில அரசுடன் பெயரளவுக்குக்கூடக் கலந்து ஆலோசிக்காமல், ஆளுநரே துணைவேந்தர்களைத் தேர்வு செய்வது தொடர்ந்தது.

நாடாளுமன்ற மக்கள் ஆட்சி முறையில், மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் முதல்வர்தான் உண்மையான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

அரசு அமைப்புச் சட்டப்படி, ஆளுநர், மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் இயங்க முடியும். ஆளுநரின் அதிகாரம் பரந்துபட்டது எனினும், பொதுவாக இவர் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது என்று, உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மேலும், ஒருவர் ஆளுநராக இருப்பதால்தான் (Ex-Officio) பல்கலைக் கழகங்களின் வேந்தராக உள்ளார்; ஆளுநரே அமைச்சரவையின் அறிவுரையின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றால், வேந்தர் பணியும் அமைச்சரவையின் பெயரிலேதான் செயல்பட முடியும்.

பல்கலைக் கழக ‘வேந்தர்’ எனும் பதவி, மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழக சட்ட விதிகளின்படி வழங்கப்பட்டது ஆகும். எனவே, வேந்தர் பதவி அதிகாரத்தை ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயல்படுத்த முடியாது.

கடந்த மார்ச் மாதம் கோவையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ரவி தனது அதிகார வரம்பை மீறி அரசியல் கருத்துகளைப் பேசியபோது, நான் கண்டனம் தெரிவித்ததுடன், மராட்டிய அரசு கொண்டு வந்த சட்டமுன்வரைவு போல தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரை தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கடந்த மாதம் 13 ஆம் தேதி அறிக்கை கொடுத்து இருந்தேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு மார்ச் 23 அன்று சென்னையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, “தமிழ்நாடு அரசு, துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் விருப்ப உரிமையைத் தவிர்க்கும் வகையில் சட்டமன்றத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன்வரைவு மூலம், கல்வித் துறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி இருப்பது பாராட்டுக்கு உரியது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko statement on Vice Chancellor appointment bill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->