அப்பாவும், அம்மாவும் எனக்கு..... யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்ற மாணவி நெகிழ்ச்சி பேட்டி.!! 
                                    
                                    
                                   UPSC won Madurai girl Poorana Sundari speech 
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த 2019 ஆம் வருடத்திற்கான இந்திய குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் 2019 ஆம் வருடத்தில் தேர்வெழுதிய 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிம்மக்கல் பகுதியை சேர்ந்த முருகேசன் - ஆவுடை தேவி தம்பதி. இந்த தம்பதியின் மகள் பூரண சுந்தரி. இவர் பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி ஆவார். 
பூரண சுந்தரியின் ஐந்து வயதில் பார்வை நரம்பு செயலிழந்த காரணத்தால் தனது பார்வையை இழந்த நிலையில், தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று ஒன்றாம் வகுப்பில் இருந்து முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். உயர்நிலைப் பள்ளியில் (ஐ.இ.டி.எஸ்.எஸ்) IEDSS கல்வி திட்டத்தின் கீழ் பயின்றுள்ளார். 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1092 மதிப்பெண்களும் பெற்று தற்போது குடிமைப்பணிகள் தேர்வில் சாதித்துள்ளார். பல சவால்கள் தன்னை சாதனை படைக்க தூண்டியதாகவும், கடந்த 2016 ஆம் வருடம் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, குடிமைப்பணி தேர்வு என இருபதுக்கும் மேற்பட்ட தேர்வுகளில் மனம் தளராமல் எழுதியுள்ள நிலையில், போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற எதிர்பார்ப்புடன், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு எழுதி வந்துள்ளார். 
கடந்த 2018 ஆம் வருடம் வங்கி தேர்வில் வெற்றி பெற்று, அரசு வங்கியில் கிளார்க்காக பணியாற்றி வரும் நிலையில், 4 ஆவது முறையாக கடந்த 2019 ஆம் வருடத்தில் நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 286 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், " நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்து கொண்டே, இந்த வெற்றி என்ற இலக்கை அடைய பல சவால்களை சந்தித்தாலும், எனது பெற்றோரின் உதவி அதனை எளிமையாக்கி விட்டது. 

அவர்கள் பாடங்களை படித்து காண்பிக்க, அதனை கேட்டு நானும் மனதில் ஏற்றிக்கொண்டு இருப்பேன். நான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் பயின்ற போது, அங்கு நண்பர்கள் கொடுத்த உற்சாகம் என்னை வெற்றியாளராக உருவாக்கியது. சிறுவயது முதலாகவே அம்மா சொல்லித் தரும் பாடம் நன்கு கவனித்துக் கொண்டதால், அது உதவியாக இருந்தது. எனக்கு அம்மா ஆசிரியராகவும் இருந்தார். 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே எனக்கு வராத அளவிற்கு என்னை பெற்றோர்கள் கவனித்துக் கொண்டனர். நான் சந்தித்த சவால்களை ஆட்சிப் பணியில் அமர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்கும் திட்டங்களை வகுப்பேன். எனது பார்வைத்திறன் பிரச்சனையே பல சவால்களை சந்தித்து, தீர்வுகளையும் அமைக்க யோசிக்க வைத்தது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், ஏழை எளிய மக்களுக்கு பாலமாக இருக்க நான் விரும்புகிறேன் " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       UPSC won Madurai girl Poorana Sundari speech