வேலூர் நகைக்கடைகளில் அரங்கேறிய நூதனத் திருட்டு...! - வாடிக்கையாளர் போல நடித்து கைவரிசை காட்டிய அக்கா, தம்பி கைது...!
unique theft took place Vellore jewelry stores Sister and brother arrested posing customers and showing off their skills
வேலூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களைப் போலச் சென்று, தந்திரமாகத் தங்க நகைகளைத் திருடியதாக அக்கா, தம்பி இருவரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். சில மாதங்களாகத் தொடர்ந்து நகைகள் காணாமல் போனதால் கண்காணிப்புக் கருவிப் பதிவுகளை ஆய்வு செய்த கடை உரிமையாளர்கள், திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகளில் கடந்த சில மாதங்களாக நகைகள் காணாமல் போயுள்ளன. இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகளின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, குடும்பத்துடன் கடைகளுக்கு வந்த சிலர், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தந்திரமாக நகைகளைத் திருடிச் சென்றது பதிவுகளில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருட்டுச் சம்பவம் தொடர்பான பதிவுகளை நகைக்கடை உரிமையாளர்கள் தங்களது கடைக்காரர்கள் குழுவில் பகிர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், கண்காணிப்புக் கருவிப் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்த காவலர்கள், நகைகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி, தெய்வானை என்பதும், இருவரும் அக்கா, தம்பி என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 கிராம் தங்க நகைகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, மேலும் எந்தெந்த கடைகளில் நகைகள் திருடப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நகைக்கடைகளில் நூதன முறையில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
unique theft took place Vellore jewelry stores Sister and brother arrested posing customers and showing off their skills