விஜயவாடாவில் கோலாகலமாகத் தொடங்கியது தேசிய சரஸ் மேளா கண்காட்சி...! - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குத்துவிளக்கேற்றி தொடக்கம்...!
National Saras Mela exhibition began bang in Vijayawada President Draupadi Murmu inaugurated event by lighting lamp
கிராமப்புறப் பெண்களின் தொழில் திறனை வெளிக்கொணரவும், அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சரஸ் மேளா கண்காட்சி, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் இன்று தொடங்கியது. வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றைப் பொதுமக்கள் பார்வையிட்டு வாங்குவதற்காக சுமார் 650 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.தேசிய சரஸ் மேளா கண்காட்சியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், கிராமப்புறப் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் தற்சார்பு இலக்கை அடைவதற்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,"தேசிய சரஸ் மேளா கண்காட்சி இதுவரை வழக்கமாக டெல்லியில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தென்னிந்திய மாநிலத்தில் முதல்முறையாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறி வரும் நிலையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள் கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி வருகின்றன.
2047-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என நம்புகிறேன்.மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும் ஆந்திரப் பிரதேச அரசும் இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சி, கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களுக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் தங்களது தயாரிப்புகளைப் பரந்த அளவில் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வாய்ப்பளிக்கிறது.
பெண்கள் தங்களது காலில் தாங்களே நிற்பதுடன், பிற பெண்களும் பொருளாதாரச் சுதந்திரத்தை அடைய உதவி வருகின்றனர். சில பெண்கள் மாதந்தோறும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகின்றனர். பெண்கள் தலைமையில் இயங்கும் தொழில் நிறுவனங்களின் திறனையும் வளர்ச்சியையும் இது எடுத்துக்காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
English Summary
National Saras Mela exhibition began bang in Vijayawada President Draupadi Murmu inaugurated event by lighting lamp