தமிழகத்தின் புதிய முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் பொறுப்பேற்பு...! - மக்கள் பவனில் நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் விஜய்...!
RV Arlekar takes charge new full time Governor Tamil Nadu Chief Minister Vijay met and congratulated him person Makkal Bhavan
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் 5-ஆம் தேதி மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனால் தமிழகத்துக்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், கேரள மாநில ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகருக்குத் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.அதன்படி, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்த அர்லேகர், முதல்-அமைச்சர் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையே, தமிழகத்துக்குப் புதிய முழுநேர ஆளுநர் நியமிக்கப்படாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக இருந்து வந்தது.இதற்கிடையில், கடந்த ஆகஸ்டு மாதம் ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சர் கிரண் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
அப்போது பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால், அவர் நாடு திரும்பியதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இந்தச் சூழலில், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ஆர்.வி.அர்லேகரே நியமிக்கப்பட்டார்.தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று முழுநேர ஆளுநராக அர்லேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்ற முதல்-அமைச்சர் விஜய், ஆளுநரை நேரில் சந்தித்துப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது.
English Summary
RV Arlekar takes charge new full time Governor Tamil Nadu Chief Minister Vijay met and congratulated him person Makkal Bhavan