"4 மாத ஆட்சியில் தவெகவின் வசீகரம் சரிந்துவிட்டது": முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசாரத்தைக் கடுமையாக விமரிசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!
TVKs Popularity Declining in 4 Months AIADMK Leader RB Udhayakumar Attacks CM Vijay Over By-Poll Campaign
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுமைகுறித்தும் முதலமைச்சர் விஜய்யின் பிரசார உத்தி குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தோல்வி பயத்தில் தவெக பிரசாரம்:
மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், "கடந்த சட்டசபை தேர்தலின் போது பெரிய அளவில் பிரசாரத்திற்கே செல்லாமல் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற விஜய், இன்றைக்குத் தனது 4 மாதகால தவெக ஆட்சியில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்ததால் தோல்வி பயத்தில் உள்ளார். மதுராந்தகத்தில் 39 இடங்களில், 5 மணி நேரம், 10 பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரசாரத்தில் இறக்கியுள்ள செய்தி, விஜய்யின் வசீகரம் மற்றும் தவெகவின் ஆட்சி ஆளுமை மீதான வீழ்ச்சியையே காட்டுகிறது" எனக் குறிப்பிட்டார்.
குதிரை பேரமும் தேர்தல் விதிமீறலும்:
முன்பு கொளத்தூர் தொகுதியில் 5 நிமிட பிரசாரத்தில் வெற்றி பெற்றதாகக் கூறிய விஜய், இப்போது மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, பதவி ஆசை காட்டி குதிரை பேரம் நடத்தி ஜனநாயகப் படுகொலை செய்து வருவதாக அவர் சாடினார். மேலும், தேர்தல் ஆணையத்தின் செலவு வரம்பைத் தாண்டி கோடிக்கணக்கில் நிதி செலவிட்டுப் பிரம்மாண்ட கூட்டங்களையும் வாகனப் பிரசாரங்களையும் நடத்தி வருவது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் குற்றம்சாட்டினார்.
தவெகவின் 4 மாத கால ஆட்சியில்:
அறிவிக்கப்படாத மின்சார வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு,
சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் லாக்கப் மரணங்கள்,
பெண்கள் பாதுகாப்பிற்கு எழுந்துள்ள கேள்விகுறி
ஆகியவை விஜய்யின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சி மாறும் கலாசாரத்திற்கு முடிவுரை:
கவர்ச்சி அரசியலாலும் வசீகரத்தாலும் மக்களை ஏமாற்றிவிட முடியாது எனக் குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னமே தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் மீண்டும் மலரும் என்றும், கட்சி மாறுகின்ற கலாசாரத்திற்கு மக்கள் அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே முடிவுரை எழுதும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
English Summary
TVKs Popularity Declining in 4 Months AIADMK Leader RB Udhayakumar Attacks CM Vijay Over By-Poll Campaign