சாத்தான்குளம் பெயர் பலகை சர்ச்சை: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் — 'இருமொழிக் கொள்கையே நிரந்தரம்' என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் விளக்கம்!
Sathankulam Signage Controversy 2 Engineers Suspended Over Three-Language Board Minister Aadhav Arjuna Reaffirms Two-Language Policy
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில், தவறிழைத்த 2 அதிகாரிகள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை:
'மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி'த் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில், குறிப்பிட்ட சில அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டது துறை ரீதியான விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இந்தத் தவறுக்குக் காரணமான உதவிப் பொறியாளர் (Assistant Engineer) மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் (Assistant Divisional Engineer) ஆகிய இரு அதிகாரிகள் நேற்றைய தினமே (01.10.2026) உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மும்மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டு, இருமொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர் பலகை அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
"இருமொழிக் கொள்கையே உயிர்மூச்சு" – அமைச்சர் உறுதி:
பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைமையிலான தமிழக அரசின் உயிர்க் கொள்கை மற்றும் நிரந்தரக் கொள்கை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இதில் எக்காலத்திலும் தவெக அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்காது எனத் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை எந்த வடிவில் வந்தாலும் அதை முறியடிப்போம் என்று குறிப்பிட்ட அவர், அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகச் செயல்படும் துறைசார் அதிகாரிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியாக எச்சரித்துள்ளார்.
English Summary
Sathankulam Signage Controversy 2 Engineers Suspended Over Three-Language Board Minister Aadhav Arjuna Reaffirms Two-Language Policy