த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம்: 21 அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு...!!
TvK Voting support government Speaker announces that action against 21 AIADMK members dropped
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் உருவான அரசியல் பரபரப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு பெரும்பான்மை ஆதரவை பெற்று வெற்றி கண்டது. வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவான நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, அந்த 25 உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்தார்.அவர் தெரிவித்ததாவது,"த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு பெறப்பட்டது.
இதுதொடர்பாக அவரிடமிருந்து மொத்தம் நான்கு கடிதங்கள் வந்தன. பின்னர், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களில் 21 பேர் அளித்த விளக்கங்களை ஏற்று, அவர்களை மன்னித்து நடவடிக்கையை கைவிடலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.அவர் அனுப்பிய அனைத்து கடிதங்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக 13-05-2026 தேதியிட்ட கடிதத்தில் இடம்பெற்ற கருத்துகளின் அடிப்படையில், 21 உறுப்பினர்களின் மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிரான மேல்நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன.எனினும், எஸ். ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு உறுப்பினர்கள் தொடர்பாக தனிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, அவர்கள் மீது உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.அவர்கள் மீதான நடவடிக்கையின் தன்மை மற்றும் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பு, அ.தி.மு.க. உள்கட்சி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
English Summary
TvK Voting support government Speaker announces that action against 21 AIADMK members dropped