பயங்கர தாக்குதல்... தொடர் மிரட்டல்...! தூத்துக்குடியை அதிரவைத்த சம்பவம்..! - சிறார் உள்பட 4 பேர் அதிரடி கைது...!
Terrible attack Continuous threats incident that shook Thoothukudi 4 people including minor arrested
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழிலாளர்களை தாக்கி, சாதிப் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதுடன், கல்லால் தாக்கியதாக கூறப்படும் சம்பவங்களில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.கயத்தாறு அருகே வடக்குக்கோனார் கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த வேல்சாமியின் மகன் சண்முகராஜ் (20). கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் ஒரு குழுவினர் நின்றுகொண்டிருந்ததாகவும், அவர்களை சற்று ஓரமாக நிற்குமாறு சண்முகராஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குழுவினர், சண்முகராஜை சாதிப் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த சண்முகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின் அடிப்படையில், 16 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் என 3 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
இதனிடையே, கோவில்பட்டி அருகே மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. வி.நாச்சியார்பட்டி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் விக்னேஷ் (26), விவசாயத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று விக்னேஷ் தனது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
காளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் கூசாலிப்பட்டியைச் சேர்ந்த அஜித் என்ற சூர்யா ஆகியோர் விக்னேஷை வழிமறித்து அவதூறாக பேசியதுடன், கல்லால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை தட்டிக்கேட்ட ரமேஷுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அஜித் என்ற சூர்யா (30) என்பவரை காவலர்கள் கைது செய்தனர்.
இரு வேறு சம்பவங்களில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவங்களின் பின்னணி மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Terrible attack Continuous threats incident that shook Thoothukudi 4 people including minor arrested