மன்னார்குடியில் அதிரடி ரைடு...! ஆன்லைன் லாட்டரி விற்ற 10 பேர் காவல்துறையிடம் சிக்கியது எப்படி...?
Mannargudi How did police catch 10 people who sold online lottery
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு தடை விதித்துள்ள ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவலர்கள் மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, அரசு தடை செய்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததாக முருகேசன், பரமசிவம், கதிரவன், சத்தியமூர்த்தி, கார்த்திகேயன், அருளானந்தம், ஐயப்பன், சசி ஜெஸ்டின், அன்புக்கரசு மற்றும் சுரேஷ் ஆகிய 10 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள், ஒரு ஐபோன், 12 திறன்பேசிகள், 4 ஆட்டோக்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.63 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குள் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்ததை உரிய முறையில் கண்காணித்து தடுக்கத் தவறியதாக, அங்கு பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ராஜ்கமல் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜ்கமலை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mannargudi How did police catch 10 people who sold online lottery