பரந்தூர் திட்டம் ரத்து: சென்னையின் 2-வது விமான நிலையத்திற்குச் செய்யூர், மணலூரை தேர்வு செய்தது தவெக அரசு! - Seithipunal
Seithipunal


சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காகச் செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள மணலூர் ஆகிய இரண்டு மாற்று இடங்களைத் தவெக அரசு தேர்வு செய்துள்ளது. இப் பகுதிகளில் முதற்கட்டத் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் (Pre-feasibility study) குறித்த விரிவான கள ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு (AAI) தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் விமானப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் 1999-ஆம் ஆண்டு முதல் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் ரூ.29,143 கோடி மதிப்பீட்டில் பசுமை விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் கொள்கை ரீதியான ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும், முப்போக விளைச்சல் தரும் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏகனாபுரம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவதாகவும், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாற்று இடங்கள் கண்டறியப்படும் என்றும் பேரவையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது செய்யூர் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் முதன்மை மாற்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், செய்யூர் பகுதி புதுச்சேரி மற்றும் கல்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளதாலும், தாம்பரம் விமானப்படை தளத்தின் வான்வெளி எல்லைக்குள் வருவதாலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறுவதில் சில நடைமுறைச் சவால்கள் உள்ளன. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் விரிவான கள ஆய்வு அறிக்கைக்குப் பிறகே 2-வது விமான நிலையம் அமையப்போகும் இறுதி இடம் குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Govt Shortlists Cheyyur and Manalur for Chennais 2nd Airport After Shelving Parandur Project Requests AAI Feasibility Study


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->