மும்பை மற்றும் புனேவில் தயிர் பானை உடைக்கும் போட்டியில் கோர விபத்து: சிறுவன் உட்பட இருவர் பலி; விதிகளைப் பின்பற்ற துணை முதல்வர் அறிவுறுத்தல்!
7-Year-Old Boy and Woman Killed in Separate Dahi Handi Accidents in Mumbai and Pune Dy CM Eknath Shinde Urges Safety Compliance
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தயிர் பானை உடைக்கும் (தஹி ஹண்டி) போட்டிகள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை மற்றும் புனே ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளின் போது நேரிட்ட விபத்துகளில் 7 வயது சிறுவன் மற்றும் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை மலாட் பகுதியில் உள்ள கிராமத்தில், உரிய முன்அனுமதியின்றி இளைஞர்கள் சிலர் தயிர் பானை உடைக்கும் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போட்டியைக் காணத் திரளான மக்கள் கூடியிருந்தனர். தயிர் பானையைத் தாங்கிப் பிடித்திருந்த கயிறானது, ஒரு மரத்திற்கும் அருகில் இருந்த கட்டடத்தின் செங்கல் தூணிற்கும் இடையே கட்டப்பட்டிருந்தது. இளைஞர்கள் மனித பிரமிடு அமைத்துப் பானையை உடைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தச் செங்கல் தூண் சரிந்து கூட்டத்தின் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த 7 வயது சிறுவனின் தலையில் தூண் பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்தான். உடனே அச்சிறுவன் மீட்கப்பட்டு மால்வானி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதேபோன்று, மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியின் போது, அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சட்டம் ஒன்று திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் பலத்த காயமடைந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இத்தொடர் துயர சம்பவங்கள் குறித்துப் பேசிய மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தயிர் பானை உடைக்கும் போட்டிகளில் மனித பிரமிடுகளை அமைக்கும் போது, போட்டியாளர்களும் அமைப்பாளர்களும் அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
7-Year-Old Boy and Woman Killed in Separate Dahi Handi Accidents in Mumbai and Pune Dy CM Eknath Shinde Urges Safety Compliance