தவெக அமைச்சர்கள் தொண்டர்களின் மனநிலையோடு பேசுகிறார்கள்: கோவையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி!
TVK Ministers Speak in Cadres Mindset on PM candidate Says VCK Chief Thirumavalavan Welcomes Key Assembly Declarations
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல், சட்டப்பேரவை அறிவிப்புகள் மற்றும் தவெகவின் பிரதமர் வேட்பாளர் விவாதம் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முக்கியச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற உத்தரவின்படி மாநிலத்தில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழல் கனிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றார். மேலும், விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த தீர்மானம் மிகுந்த வரவேற்பிற்குரியது எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்துச் சட்டம்-ஒழுங்கை உறுதியாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடத்தப்படும் 2-வது கட்டக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம் குறித்துக் கூறுகையில், இக்கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் மற்றும் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது கூட்டம் நடைபெறும் போதே முழுமையாகத் தெரியவரும் என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு விளக்கமளித்த அவர், "வடஇந்திய ஊடகங்களின் கணிப்புகளில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருடன் விஜய்யின் பெயரும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே தவெக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவ்வாறு பேசி வருகின்றனர். தொண்டர்களின் மனநிலையில்தான் அமைச்சர்களும் பேசுகிறார்களே தவிர, இது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு கிடையாது. 2029 மக்களவைத் தேர்தல் வரும்போது பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேச வேண்டிய நேரத்தில் விரிவாகப் பேசுவோம்" எனத் தெரிவித்தார்.
English Summary
TVK Ministers Speak in Cadres Mindset on PM candidate Says VCK Chief Thirumavalavan Welcomes Key Assembly Declarations