திருவள்ளூர் அருகே ரூ.12.5 லட்சத்துடன் மாயமான ஏடிஎம் இயந்திரம்: 10 நாட்களில் 3-வது கொள்ளையால் தொடரும் அதிர்ச்சி!
Entire ATM Machine Stolen with 12 Lakh Near Thiruvallur 3rd ATM Heist Around Chennai in 10 Days
திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில், ரூ.12,54,700 பணத்துடன் இருந்த முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே மர்ம கும்பல் ஒன்று பெயர்த்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்த மையத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரமே காணாமல் போயிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வெள்ளவேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி காவல் ஆணையர் மற்றும் வெள்ளவேடு காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டனர். மேலும், ஏடிஎம் மையத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணையில், ரூ.12.5 லட்சத்திற்கும் அதிகமான பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் நிறைந்து காணப்படும் பிரதான நெடுஞ்சாலைப் பகுதியில் மர்ம நபர்கள் எவ்வாறு இந்த கொள்ளையைச் செய்து தப்பினர் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் நடைபெறும் 3-வது ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுப்பேடு கிராமத்தில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.9 லட்சத்தை வடமாநிலக் கும்பல் கொள்ளையடித்தது. அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டியிலும் இதே பாணியில் ரூ.12 லட்சம் சுருட்டப்பட்டது. தற்போது 3-வதாகக் கூடப்பாக்கத்தில் முழு ஏடிஎம் இயந்திரமே தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் காவல்துறையினரிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Entire ATM Machine Stolen with 12 Lakh Near Thiruvallur 3rd ATM Heist Around Chennai in 10 Days