சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்ற குற்றச்சாட்டு; தவெக பிரமுகர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்..!
TVK functionary removed from primary membership following allegations of illegally selling liquor at inflated price
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவர் தனிப்படை போலீஸாரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்ட நிலையில், தனிப்படை போலீஸார் பாடாலூரில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுப் பிடிக்கப்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸார், மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட, பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பனின் 36 வயதான மகன் உமேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தவெக பிரமுகர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசாரை தொடர் விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்றுள்ளமை தெரிய வந்தது. அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பிரபல இணையதள பக்கத்தில் செய்திகள் வெளியான நிலையில், இன்று மாலை தவெக தலைமை அலுவலகம், உமேஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
English Summary
TVK functionary removed from primary membership following allegations of illegally selling liquor at inflated price