'சொட்டு நீருக்குத் தவிக்கும் மக்கள்'...! "அரசு போர்க்கால அடிப்படையில் களமிறங்கணும்!" - நயினார் நாகேந்திரன் ஆவேசம்
People suffering from drip water Government must go on a war footing Nayanar Nagendran Obsession
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்கவும் முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தீவிரமடைந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதுடன், பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்துள்ளது.இத்தகைய சூழலை முன்கூட்டியே கணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசு தவறியதே, தற்போது மக்கள் குடிநீருக்காக அலைக்கழிக்கப்படும் நிலைக்கு முக்கிய காரணம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மக்களின் அடிப்படை தேவைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என முதலமைச்சர் விஜய்யை குற்றம்சாட்டியுள்ள அவர், இனியாவது துரிதமாக செயல்பட்டு பொதுமக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தல், குடிநீர் லாரிகள் மூலம் தேவையான அளவு தண்ணீர் விநியோகித்தல் உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, மழைநீரை அதிகளவில் சேமிக்கும் வகையில் அவற்றின் கொள்ளளவை மேம்படுத்த வேண்டும்.
மேலும், தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் தேவையான இடங்களில் சிறிய தடுப்பணைகளை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
People suffering from drip water Government must go on a war footing Nayanar Nagendran Obsession