'பூட்டிய வீட்டை நோட்டம் போட்ட வாலிபர்கள்'...! - மேல்நல்லாத்தூரில் 10 சவரன் நகை திருட்டு... சிக்கியது எப்படி...?
Young men who broke into locked house 10 sovereigns of jewellery stolen Melnallathur How was it caught
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவலர்கள், திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 2 இளைஞர்களை கைது செய்தனர்.மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குறளரசன். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்ததாக தெரிகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.பின்னர் வீட்டில் இருந்த பீரோவின் கதவையும் உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
வீடு திரும்பிய குறளரசன், பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து குறளரசன் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து முக்கிய தடயங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சஞ்சய் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 இளைஞர்களை காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இருவரையும் திருட்டு வழக்கில் காவலர்கள் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, திருடப்பட்ட நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Young men who broke into locked house 10 sovereigns of jewellery stolen Melnallathur How was it caught