ரூ.67,452 கோடி முதலீடு... 97 அதிரடி ஒப்பந்தங்கள்...! - முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து...!
Investment 67452 crore 97 landmark agreements Signed presence Chief Minister Vijay
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு புதிய வேகத்தை அளிக்கும் வகையில், ரூ.1 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு கவனம் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்தில் பெருமளவிலான முதலீடுகளும், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ந்தேதி தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வரும் த.வெ.க. அரசு, தமிழகத்தின் தொழில் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று 96 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 97 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக தமிழ்நாட்டில் ரூ.67,452 கோடி அளவிலான தொழில் முதலீடுகள் வரவுள்ளன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், த.வெ.க. அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டிற்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் விரிவாக்கத்திற்காக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கணிசமான தொகையை முதலீடு செய்ய முன்வந்துள்ளன.ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அல்ட்ராவயோலெட் நிறுவனம் ரூ.779 கோடி முதலீட்டில் கிருஷ்ணகிரியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதன் வாயிலாக 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
டெய்ம்லர் நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் புதிய ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்ய உள்ளது.
லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
டைட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.பல்வேறு துறைகளில் முன்னணி நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் விரிவடைவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Investment 67452 crore 97 landmark agreements Signed presence Chief Minister Vijay