த.வெ.க. - காங்கிரஸ் மெகா கூட்டணியா...? தமிழகம் வரும் ராகுல் காந்தி... முதலமைச்சர் விஜய்யிடம் கோரப்பட்ட நேரம் எதற்கு...?
TVK Congress mega alliance Rahul Gandhi coming Tamil Nadu Why time requested from Chief Minister Vijay
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 21ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பல ஆண்டுகளாக கூட்டணி அரசியலில் மட்டுமே இடம்பெற்று வந்த காங்கிரஸ், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அமைச்சரவையில் தனது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.
தற்போது தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்த தேசியத் தலைமையும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்.) வரும் 21ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி முகாமின் ஒரு நாளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் பங்கேற்று, மாவட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் வியூகம், கட்சி வளர்ச்சி மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளதாக கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழக முதலமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய் மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக முதலமைச்சர் விஜயின் நேரமும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரின் நேரம் உறுதி செய்யப்பட்ட பின்னர் நிகழ்ச்சியின் தேதி மற்றும் வடிவம் இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சந்திப்பு நடைபெறுமானால், தமிழக அரசியல் களத்தில் முக்கிய கவனம் பெறும் நிகழ்வாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
English Summary
TVK Congress mega alliance Rahul Gandhi coming Tamil Nadu Why time requested from Chief Minister Vijay