மக்களுக்கான திட்டம்...ஸ்பாட்டுக்கே சென்ற முதல்வர்...! சென்னை குடிநீர் திட்டப் பணிகளில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு...!
plan people Chief Minister went spot Chief Minister Vijay personally inspected Chennai water supply project work
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக விளங்கி வரும் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் திறன் கொண்ட திட்டத்தை ரூ.914.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த கடந்த 2009ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலையில் 40.05 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் வி.ஏ.டெக் வாபாக் மற்றும் ஐ.டி.இ. தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டன.
2010ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம், அனைத்து பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளுக்கும், தகவல் தொழில்நுட்ப வளாகங்களைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் குழாய் வழித்தடங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 10 லட்சம் மக்கள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.
திட்டத்தின் முதல் அலகு நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறனுடன் 2013ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது அலகு 150 மில்லியன் லிட்டர் திறனுடன் 2024ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
மேலும், நெம்மேலியில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட மூன்றாவது மிகப்பெரிய குடிநீராக்கும் ஆலை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட வளாகத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், நிலையத்தின் செயல்பாடு, குடிநீர் உற்பத்தி அளவு, விரிவாக்கப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட திட்டங்கள், விநியோக வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
தற்போது நெம்மேலியில் செயல்பட்டு வரும் 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட நிலையங்கள் மூலம், சென்னை மாநகருக்கு தினமும் மொத்தம் 1,230 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் சுமார் 22 லட்சம் மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
plan people Chief Minister went spot Chief Minister Vijay personally inspected Chennai water supply project work