பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்... புத்தம் புதிய ‘நவீன இலவச கருத்தடை சாதனம்’ அறிமுகம்...!
Importance women health Introducing brand new modern free contraceptive device
பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகள் வரை பாதுகாப்பான கர்ப்பத் தடுப்பை வழங்கும் 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' என்ற அதிநவீன கருத்தடை சாதனம், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையேற்றார். திட்ட இயக்குநர் ஜோஸ்பின் ஹேமா, மருத்துவர்கள் சித்ராதேவி, ஜெயந்தி பிரசாத், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து குடும்ப நலத்துறை துணை இயக்குநர் நடராஜன் மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுத் தலைவர் காயத்ரி ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர்.

அவர்கள் தெரிவித்ததாவது,"சென்னை மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த அதிநவீன கருத்தடை சாதனம், தற்போது தென் மாவட்டங்களில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி உள்ளிட்ட வழக்கமான கருத்தடை முறைகளை விட, இந்தச் சாதனம் பாதுகாப்பானதும், பயன்படுத்துவதற்கு எளிமையானதும், நீண்டகால பலன் அளிப்பதுமான நவீன மருத்துவத் தீர்வாகும்.சுமார் 3 சென்டிமீட்டர் நீளமுடைய தீக்குச்சி வடிவிலான இந்தச் சாதனம், வலது கை பழக்கம் உள்ள பெண்களுக்கு இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ள பெண்களுக்கு வலது கையிலும் தோலுக்கு அடியில் பொருத்தப்படுகிறது.
வெளிப்புறத்தில் இது தெரியாத வகையில் பொருத்தப்படுவதால், அன்றாட வாழ்க்கையில் எந்தவித இடையூறும் ஏற்படாது.இந்தச் சாதனத்தில் உள்ள ஹார்மோன், தினமும் மிகக் குறைந்த அளவில் உடலில் வெளியேறி, கரு உருவாவதைத் தடுக்கும்.
ஒருமுறை பொருத்தினால் மூன்று ஆண்டுகள் வரை கர்ப்பத் தடுப்பு பாதுகாப்பை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகள் நிறைவடையும் முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் ஏற்பட்டால், எப்போது வேண்டுமானாலும் இந்தச் சாதனத்தை எளிதாக அகற்றலாம். அதைத் தொடர்ந்து பெண்கள் இயல்பான முறையில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.குழந்தை பெற்ற பெண்களுக்கு மட்டுமே இந்தச் சாதனம் பரிந்துரைக்கப்படுகிறது.
இதனால் ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாது என்றும், 18 முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு இது பொருத்தமான கருத்தடை முறையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சாதனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.3,000 என்றாலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பெண்களுக்கு இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
உடலில் பொருத்தப்பட்டிருப்பது தெரியாத வகையில் இருப்பதுடன், எந்தவித வலி, அசௌகரியம் அல்லது அன்றாட பணிகளில் தடையும் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக, இதய நோய் உள்ளிட்ட இணைநோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தச் சாதனம் பாதுகாப்பான கருத்தடை முறையாக அமையும் என்றும், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு பழைய சாதனத்தை அகற்றி புதிய சாதனத்தை பொருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சாதனத்தை பெண்களுக்கு பாதுகாப்பாக பொருத்தும் நடைமுறைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது 72 கருத்தடை சாதனங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், கூடுதல் தேவை ஏற்பட்டால் அரசிடம் இருந்து மேலும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Importance women health Introducing brand new modern free contraceptive device