குதிரைப் பேரம் சர்ச்சை தீவிரம்...! - ரூ.50 கோடி பேரம் பேசியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் குதிரைப் பேரம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், புதிய ஆடியோ ஆதாரத்துடன் வெளியான குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடி பேரம் பேசப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

இதையடுத்து, தங்களது ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் திமுக குதிரைப் பேர அரசியலில் ஈடுபட்டு வருவதாக த.வெ.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.மறுபுறம், திமுக தரப்பும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை த.வெ.க. அரசு அணுகி ஆதரவைப் பெற முயற்சி செய்து வருவதாக எதிர்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதற்கிடையில், இதுவரை அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்திருப்பதும், இதையே உண்மையான குதிரைப் பேரம் என அதிமுக விமர்சித்து வருவதும் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

இந்தப் பின்னணியில், தமிழகத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் குதிரைப் பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பதவி இல்லாத இரு நபர்கள் பங்கேற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஒரே நாளில் ஆளுநரிடம் மனு அளித்தன.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் புதிய பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் தன்னிடம் பேரம் பேசியதாக தெரிவித்தார்.

திமுகவில் இணைவதற்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் ரூ.50 கோடி வழங்கப்படும் என்றும், அதோடு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்றும் தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும், அந்த பேரத்தை ஏற்க மறுத்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசியல் அழுத்தம் கொடுத்து திமுகவில் இணையுமாறு தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து சமூக வலைதளங்களில் தமக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாகவும் விஜி சரவணன் குற்றம்சாட்டினார்.தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள புதிய குற்றச்சாட்டு மற்றும் ஆடியோ பதிவு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horse trading controversy intensifies TVK MLA alleges 50 crore deal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->