"எனக்கு ஏன் தவெக பெட்டி கொடுக்கப்போகிறது?" திமுக, அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு மரகதம் குமரவேல் பதிலடி! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டப் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் மரகதம் குமரவேல், தன் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

ராஜினாமாவிற்கான காரணம்:

தன் மீது திமுக மற்றும் அதிமுக சுமத்தும் பிரதானக் குற்றச்சாட்டான எம்.எல்.ஏ பதவி ராஜினாமா குறித்துப் பேசிய அவர், "தீய சக்தியான திமுகவுடன் இணைய அதிமுக முடிவு செய்தபோதுதான், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி அப்பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறினேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராலும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவாலும் அரசியலில் அங்கீகாரம் பெற்றவள் நான். எனது தந்தை ராமாபுரம் தோட்டத்தில் வேலை பார்த்தவர்; எம்.ஜி.ஆரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்த எனக்கு, ஜெயலலிதா எந்தக் கட்சிக்கு எதிராக அதிமுகவை உருவாக்கினாரோ அதே திமுகவுடன் இணைவதை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று சுட்டிக்காட்டினார்.

குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு:

தவெகவில் இணைந்தது குறித்த குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த அவர், "ஊழலற்ற ஆட்சியைத் தருவதே தவெகவின் முதன்மைக் கொள்கை. வாக்குக்குப் பணம் கொடுக்காமல் மாபெரும் வெற்றி பெற்றுச் சரித்திரம் படைத்த முதலமைச்சர் விஜய், எனக்கு ஏன் பெட்டி (பணம்) கொடுத்துத் தூக்கப் போகிறார்? இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் என் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இந்த வண்டியில் ஏறும் போது 'நான் இருக்கிறேன் அம்மா' என்று கை கொடுத்து ஏற்றிவிட்ட தலைவர் விஜய்க்கு என் வாழ்நாள் நன்றிகள்" எனக் குறிப்பிட்டார்.

தொகுதி மக்களுக்குக் கோரிக்கை:

தொடர்ந்து பேசிய அவர், தமக்கான சுயநலத்திற்காக அல்லாமல் மதுராந்தகம் தொகுதி மக்களின் நல்வாழ்வுக்காகவே தவெகவில் இணைந்ததாகத் தெரிவித்தார். "என்னைப் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, என் மதுராந்தகம் தொகுதி மக்களைப் பார்த்துக்கொண்டு, அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செய்து தாருங்கள்" என முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த அவர், இத்தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்று அதனைத் தலைவருக்குக் காணிக்கையாக்குவேன் என உறுதிபூண்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Candidate Maragatham Kumaravel Slams DMK-AIADMK Bribery Allegations Explains Resignation at Campaign Rally


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->