ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்த போக்குவரத்து துறை!
transport department gave priority to driving training schools
பொதுமக்களுக்கான நாட்கள் குறைப்பு!
வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் ஓட்டுனர் உரிமம் பெறும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் தொடர்பாக மக்களிடமிருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக போக்குவரத்து துறை ஆணையர் தரப்பிலிருந்து வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு கடந்த மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளி கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்தி ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்தி ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நடைமுறையை திடீரென போக்குவரத்து துறை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி தற்பொழுது வெளியிட்டுள்ள உத்தரவில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டுமே பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் ஓட்டுநர் பயிற்சி மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வு வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாத கால இடைவெளியில் இரண்டு முறை தேர்வு நாட்கள் மாற்றப்பட்டது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மக்களுக்காக இயங்கும் அரசு இயந்திரம் தற்பொழுது தனியார் பயிற்சி பள்ளிகளுக்காக இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
transport department gave priority to driving training schools