கோவில் நுழைவு நீதிமன்ற அனுமதிக்கு போலீசார் தடை! பட்டியலின மக்களின் போராட்டத்தால் நாமக்கல்லில் பரபரப்பு!
Tnpolice stopped sc people when enter Hindu temple as per court order
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நீதிமன்றத்தின் உத்தரவின் படி பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட முயன்றதாகவும், அதற்கு மற்றொரு சமூகத்தினர் அனுமதி வழங்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிய வருகிறது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெரிய மாரியம்மன் கோவிலில் யாரும் வழிபடக்கூடாது எனவும் திருவிழா எடுத்து நடத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை கடந்த 2017 ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பேளுக்குறிச்சியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மறு உத்தரவு வரும் வரை பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் அனைத்து தரப்பினரும் வழிபடலாம் எனவும், திருவிழா மட்டும் நடத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று பட்டியலின மக்கள் பேளுக்குறிச்சியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் வழிபட நீதிமன்ற உத்தரவு மற்றும் தாம்பூல தட்டுடன் சென்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பட்டியலின மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவிலுக்குள் நுழே முயன்ற பட்டேல் இன மக்களை போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினார். இதனால் பட்டியலின மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவை கூட செயல்படுத்த முடியாத தமிழக காவல்துறையினரை கண்டித்து பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய பட்டியலின மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை கூட செயல்படுத்த முடியாத நிலையில்தான் தமிழக காவல்துறை உள்ளதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Tnpolice stopped sc people when enter Hindu temple as per court order