தமிழக அரசின் பொங்கல் இலவச சேலை, வேஷ்டி எப்போது விநியோகம்? அமைச்சர் கொடுத்த தகவல்!
TNGovt Pongal Washti Saree
காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம், எண்ணைக்காரத் தெருவில் உள்ள தனது விற்பனை நிலையத்தை முழுமையாக புனரமைத்து புதுப்பொலிவுடன் திறந்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை மாநில கைத்தறி மற்றும் நெசவுத் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஊடகங்களை சந்தித்த அமைச்சர் காந்தி கூறியதாவது: திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தரமாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் அணிகின்றனர்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பால் பட்டுப் புடவைகளின் விலையும் உயர்ந்துள்ளதால், புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்கு பெரும் பாதிப்பு இல்லை. திமுக ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கூலி வழங்கப்படுகிறது.
அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதுவரை 58 கூட்டுறவு சங்கங்கள் நவீனமயமாக்கப்பட்டு லாபத்தில் இயங்குகின்றன என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
English Summary
TNGovt Pongal Washti Saree