கரூர் வேலுசாமிபுரத்தில் 02-வது நாளாக சிபிஐ குழுவினர் ஆய்வு..!
CBI team inspects Velusamypuram Karur for 2nd day
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, கரூர் வேலுசாமிபுரத்தில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 08 மணியளவில் கரூர் சென்ற சிபிஐ குழுவினர் அங்கு பயணியர் விடுதிக்கு சென்றனர். பின்னர், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, வேலுசாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான கனகராஜ், அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ள ஆனந்த் மற்றும் காவல்துறைக்கு வீடியோ எடுத்து கொடுத்த புகைப்படக்காரர் ராஜசேகரனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, பிரவீன்குமார் தலைமையிலான 06 பேர் கொண்ட குழுவினர், நேற்று மதுரையில் இருந்து கூடுதலாக வந்த சிபிஐ அதிகாரிகள் 06 பேர் என 12 பேரும் சேர்ந்து நேற்று காலை 11 மணியளவில் 02 கார்களில் சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அத்துடன், கரூர்-ஈரோடு சாலையில் 600 மீட்டர் தூரத்துக்கு சாலையின் நீளம், அகலத்தையம்அவர்கள், அளந்து ஆய்வு செய்தனர். இதன் போது,60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்ற அதிகாரிகள், நீங்கள் காலையில் எத்தனை மணிக்கு கடை திறப்பீர்கள், இரவு எத்தனை மணிக்கு பூட்டுவீர்கள். சம்பவம் நடந்த நாளில் கடை திறந்த நேரம், பூட்டிய நேரம் குறித்து விசாரித்த்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை 07 மணியளவில், 02-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் வேலுசாமிபுரத்துக்கு சென்று ஆய்வை தொடர்ந்தனர். நேற்று சாலை அளவீடு செய்த நிலையில் மீதமுள்ள சாலையில் இன்று காலை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரசார வாகனம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீள, அகலம் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
CBI team inspects Velusamypuram Karur for 2nd day