பீகார் சட்டப்பேரவை தேர்தல்; கருத்துக்கணிப்பு முடிவுகளால் பரபரப்பு; சூடுபிடித்துள்ள தேர்தல் களம்..!
Bihar Assembly election exit poll results create excitement
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குகள் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தேர்தலில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்றும், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் எந்த அணியினின் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜேவிசி’ நிகழ்ச்சியின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கருத்துக்கணிப்பின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 120 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி அதிக முன்னிலையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியா கூட்டணி 93 முதல் 112 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 70 முதல் 81 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 42 முதல் 48 இடங்களையும் கைப்பற்றும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 05 முதல் 07 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 02 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 01 முதல் 02 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அத்துடன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 69 முதல் 78 இடங்களையும், காங்கிரஸ் 09 முதல் 17 இடங்களையும், இடதுசாரிக் கட்சிகள் (சிபிஐ (எம்எல்), சிபிஐ, சிபிஎம்) அனைத்தும் சேர்ந்து 14 முதல் 17 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது கணக்கைத் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் மற்றும் பிற கட்சிகள் 08 முதல் 10 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், கட்சிகளின் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி 41% முதல் 43% வரையிலான வாக்குகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணியின் 39% முதல் 41% வரையிலான வாக்கு சதவீதத்தை விட சற்றே அதிகம் என்று கூறப்படுகிறது. ஜன சுராஜ் கட்சி 6% முதல் 7% வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10% முதல் 11% வரையிலான வாக்குகளையும் பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இரு கூட்டணிகளுக்கும் முன்னிலை விகிதங்களில் அதிக வித்தியாசம் இருந்தாலும் கூட, வாக்கு சதவீத வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால், பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
English Summary
Bihar Assembly election exit poll results create excitement