தமிழ்நாட்டில் SIR: சென்னையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: கூட்டணி அல்லாத கட்சிகள் பங்கேற்குமா..?
All party meeting in Chennai tomorrow on SIR in Tamil Nadu
சென்னையில் நாளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீஹாரை தொடர்ந்து, 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், வருகிற 04-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் எனவும், பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே, இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது என்றும் இதை எதிர்த்து தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இது தமிழ்நாட்டுக்கான பிரச்சினை, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 02-ஆம் தேதி (நாளை) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் காலை 10 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கூட்டணியில் அல்லாத தவெக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாளையத்தினம் இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் அனைத்து பங்கேற்குமா?என்பது நாளை தெரியவரும். இக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
All party meeting in Chennai tomorrow on SIR in Tamil Nadu