10, 11ம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த 10, 11ம் வகுப்பு (பிளஸ் 1) பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள தனி தேர்வர்களிடம் இருந்து துணை தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. துணை தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மே 22 முதல் ஜூன் 4ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர்கள் அரசு தேர்வு துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை தேர்வு துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.

கடைசி நாளான ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்காவிட்டால், சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத்துடன் ஜூன் 5, 6ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம் 10ம் வகுப்புக்கு ரூ.500 மற்றும் 11ம் வகுப்புக்கு ரூ.1,000 ஆகும். 2024-25ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது.

10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனி தேர்வர்கள் (முதல்முறையாக அனைத்து பாடங்களையும் எழுதுவோர்), ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த அறிவியல் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மே 23 முதல் 30ம் தேதிக்குள் ரூ.125 செலுத்தி பெயரை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். இதை சேவை மையத்தில் காண்பித்தால் மட்டுமே கருத்தியல் (தியரி) தேர்வுக்கு பதிவுசெய்ய முடியும்.

செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க உள்ள தனி தேர்வர்களும் தவறாமல் சேவை மையத்துக்கு சென்று, கருத்தியல் தேர்வுக்கும் விண்ணப்பித்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நுழைவு சீட்டு இருந்தால் மட்டுமே செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 10, 11ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN School 10 11th exam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->