கலை, அறிவியல் படிப்புக்கு ஆர்வம் அதிகரிப்பு: 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்..!
Higher Education Minister K V Chezhiyan says student applications for arts and science courses are increasing
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இதுவரையில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
'தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இன்று (19.05.2025) மாலை 6 மணி நிலவரப்படி 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதில் 46,691 மாணவர்களும், 75,959 மாணவிகளும், 48 மூன்றாம் பாலினத்தவரும் ஆக மொத்தம் 1,22,698 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வருகிற 27-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 165 உதவி மையங்கள் மற்றும் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்தந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது dceofficehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Higher Education Minister K V Chezhiyan says student applications for arts and science courses are increasing