தமிழ்நாட்டில் நாளை தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்.. மினி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்!
TN Private Bus Owners Announce 24-Hour Strike Over Vettri Payanam Extension Mini Buses to Operate Normally
தமிழ்நாட்டில் அரசு நகர மற்றும் சாதாரணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் இத்திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் வேலைநிறுத்தம்:
அரசுப் பேருந்துகளில் இத்திட்டம் பெருமளவில் விரிவுபடுத்தப்படுவதால், தங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுத் தொழில் முடங்கும் அபாயம் உருவாவதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்துத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் அல்லது மகளிருக்கான இலவசப் பயணச் சலுகையைத் தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான மானியத் தொகையை அரசு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பாகச் செப்டம்பர் 30 (புதன்கிழமை) ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை 24 மணி நேரத்திற்கு மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்:
அதேவேளையில், இ வேலைநிறுத்தப் போராட்டத்தில் தங்களுக்கு எவ்விதப் பங்கேற்பும் இல்லை எனத் தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெளிவுபடுத்தியுள்ளது. மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தின் முடிவின்படி, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மினி பேருந்துகளும் நாளை வழக்கம்போல் தடையின்றி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் முடங்குவதால் வெளியூர் மற்றும் கிராமப்புறப் பயணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
English Summary
TN Private Bus Owners Announce 24-Hour Strike Over Vettri Payanam Extension Mini Buses to Operate Normally