தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு: தவெக அரசின் அதிரடி நடவடிக்கை!
TN Government to Release White Paper on State Finances Today Focus on Debt and Election Promises
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை இன்று மாலை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், இந்த அறிக்கை மாநில அரசியல் மற்றும் பொதுவட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
பின்னணியும் முதல்வர் விஜய்யின் உறுதிமொழியும்:
கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சி. ஜோசப் விஜய், தனது பதவியேற்பு விழாவின் போதே மாநிலத்தின் நிதி மேலாண்மை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவித்திருந்தார். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அரசு கஜானா முழுமையாகக் காலியாகிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தங்களது தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றக் கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாகச் செயல்பாடுகளை முறைப்படி ஆய்வு செய்யவும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அவர் அன்று உறுதியளித்திருந்தார்.
இன்று மாலை வெளியாகும் அறிக்கை:
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அரசுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வருவாய், செலவினங்கள், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு மற்றும் அதற்காகச் செலுத்தப்பட்ட வட்டி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார்.
சட்டமன்றக் கூட்டமும் தேர்தல் வாக்குறுதிகளும்:
வருகிற ஜூன் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில், இக்கூட்டத்தொடரில் புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையில் வெளிவரவுள்ள நிதி நிலவரத்தின் அடிப்படையிலேயே, தவெக-வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான:
மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை,
60 வயதுக்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு ரூ. 3,000 ஓய்வூதியம்,
மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம்
போன்ற முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விபரங்களும் வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TN Government to Release White Paper on State Finances Today Focus on Debt and Election Promises