போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் சி.வசங்கரின் உதவியாளர் சென்னையில் கைது!
Former DMK Minister SS Sivasankar Assistant Arrested in Chennai Over Job Scam
திமுக குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முந்தைய திமுக ஆட்சியில் (2022-2026) போக்குவரத்துத் துறை மற்றும் கூடுதல் பொறுப்பாக மின்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான எஸ்.எஸ். சிவசங்கரின் தனி உதவியாளர் இளஞ்செழியன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று சென்னையில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி மற்றும் மோசடிப் புகார்
கடந்த 2022 முதல் 2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சி காலத்தில், தமிழகப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பலரிடம் பல இலட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. தங்களுக்குத் தெரிந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக நம்பவைத்து, ஏழை எளிய மக்களிடம் பெரும் தொகையைக் கையாடல் செய்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அண்மையில் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸாரின் அதிரடி கைது நடவடிக்கை
இந்தப் புகார்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch - CCB) போலீஸார், மோசடிப் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் நெருங்கிய உதவியாளரான இளஞ்செழியனுக்கு நேரடித் தொடர்பு இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்களைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று சென்னையில் வசித்து வந்த இளஞ்செழியனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அடுத்தகட்ட விசாரணை தீவிரம்
கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியனிடம், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் எவ்வாறு வாங்கப்பட்டது, யாருடைய பெயர்களில் இந்தப் பணம் கைமாறியது மற்றும் இதுவரை எவ்வளவு கோடி ரூபாய் வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தங்களின் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு மோசடிப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
English Summary
Former DMK Minister SS Sivasankar Assistant Arrested in Chennai Over Job Scam