ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம் முழுமையாக ரத்து - தமிழக அரசு!
TN Government cough syrup factory Children Death
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரக திசு பரிசோதனையில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில், அந்த இருமல் மருந்து காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்தது தெரியவந்தது. மருந்தில் தடை செய்யப்பட்ட நச்சு ரசாயனம் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டதால், கோல்ட்ரிப் மருந்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது.
அக்.3 அன்று ஸ்ரீசன் பார்மா ஆலையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தயாரிப்பு மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில், 48.6 சதவீத அளவுக்கு டை எத்திலீன் கிளைக்கால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆலையம் மூடப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் உரிய ஆய்வு மேற்கொள்ளாத இரண்டு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், டிரான்சிட் வாரண்ட் மூலம் மத்தியபிரதேசம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிலையங்களில் முழுமையான ஆய்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மருந்து தயாரிப்பு துறையில் தரக் கட்டுப்பாட்டின் அவசியத்தையும், குழந்தைகளின் உயிர் பாதுகாப்பில் அலட்சியம் எவ்வளவு பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
English Summary
TN Government cough syrup factory Children Death