கனமழை, குளிர்... திருப்பதிக்கு வந்த பக்தர்கள் பெரும் அவதி!
Tirupati temple devotees heavy rain
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்ததால், மலைப்பாதை முழுவதும் பெரும் நெரிசல் நிலவியது.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால், அலிபிரி சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால், மலை மீது செல்லும் வழியில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்றன. நாராயணகிரி தோட்டம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
மேலும், திருப்பதியில் இடைவிடாது பெய்து வரும் மழையால் குழந்தைகள் முதல் வயதானோர் வரை குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், தேவஸ்தானம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, பால் உள்ளிட்ட தேவையான சேவைகளை வழங்கி வருகின்றனர். ஆனால், தங்குவதற்கான அறைகள் இல்லாததால், பலர் வெளியிலேயே தங்கிச் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் வார இறுதி விடுமுறைகளை தவிர்த்து பிற நாட்களில் தரிசனத்திற்கு வரும்படி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று மட்டும் 90,011 பேர் தரிசனம் செய்தனர். இதில் 33,378 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.23 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இலவச நேரடி தரிசனத்தில் வந்தவர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
English Summary
Tirupati temple devotees heavy rain