சாதிய பின்னணியில் பாளை., சிறை கொலைவழக்கு?.. உரிய விசாரணை வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாளை சிறைக் கொலை தொடர்பாக உண்மையான பின்னணியை அறிய விசாரணை தேவை என மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட முத்து மனோ என்ற கைதி, அடுத்த சில மணி நேரங்களில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும், அதன் பின்னணியாக கூறப்படும் காரணங்களும் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தவறிழைத்தவர்களை திருத்த வேண்டிய சிறைச்சாலைகள் கொலைக்களங்களாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு ஒன்றில்  கைது செய்யப்பட்ட முத்துமனோ என்ற 27 வயது இளைஞர் திருவைகுண்டம் கிளைச்சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். கடந்த 22-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட முத்து மனோ அடுத்த சில மணி நேரங்களில் அந்த சிறையில் இருந்த சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கைதியாகவே இருந்தாலும், திருத்தி வாழ வைக்கப்பட வேண்டிய இளைஞர் முத்து மனோ, படுகொலை செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதுமட்டுமின்றி, சிறையில் அதிகாரிகள், காவலர்கள் என பெரும் படையே இருந்தும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலை திடீர் கோபத் தூண்டுதலால் நிகழ்ந்த ஒன்றாகத் தெரியவில்லை. நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு, அரங்கேற்றப்பட்ட கொலையாகவே தோன்றுகிறது. இத்தகைய கொடூரங்கள் தடுக்கப்பட வேண்டும்.

முத்து மனோ கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் 22-ஆம் தேதி வரை 15 நாட்கள் திருவைகுண்டம் கிளைச்சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். அந்த 15 நாட்களும் திருவைகுண்டம் சிறையில் அவருக்கு ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், திருவைகுண்டம் சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, 22-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். அடுத்த இரு மணி நேரத்தில் அவர் சிறையில் இருந்த இன்னொரு கும்பலால் பாறாங்கல்லால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த வர்ணனையை கேட்ட மாத்திரத்திலேயே, பொய்யாக ஜோடிக்கப்பட்ட ஒன்று என்பதை தமிழக சூழலை அறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

முத்து மனோ படுகொலை தொடர்பாக எழும் கீழ்க்கண்ட ஐயங்களுக்கு விடை காணப்பட வேண்டும்.

1. திருவைகுண்டம் கிளைச்சிறையில் முத்து மனோவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்டுபிடித்த காவல்துறையினர், பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்கு முன் அங்கு அவருக்கு ஆபத்து  உள்ளதா? என ஆராய்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய காவல்துறை தவறியது ஏன்?

2. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இரு மணி நேரத்தில் முத்துமனோ தரப்புக்கும்,   அவரது எதிர்த்தரப்புக்கும் மோதல் ஏற்பட இயல்பான சூழலில் வாய்ப்பே இல்லை. முத்துமனோவுக்கும், அவரது எதிர்த்தரப்புக்கும் இடையே ஏற்கனவே இருந்த பகை காரணமாகவே இந்த படுகொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே பாளை சிறையின் குறிப்பிட்ட பகுதியில் அவர் அடைக்கப்பட்டாரா?

3. முத்து மனோவை அவரது எதிரிகள் சிறையில் தாக்கிய போது, அதைத் தடுக்க ஒரு காவலர் முயன்றதாகவும், ஆனால், அதை சிறைக்காவலர்களில் இன்னொரு தரப்பினர் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான சிறைத்துறையின் விளக்கம் என்ன?

4. முத்து மனோ பிற்பகல் 3.45 மணிக்கு சிறையில் தாக்கப்பட்டுள்ளார். ஆனால், அதன்பின்னர் சில மணி நேரம் கழித்து தான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன?

5. முத்து மனோவின் சொந்த ஊரில் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை,  பாலியல் சீண்டல் செய்த இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தான் முத்து மனோ கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமானவரின் தூண்டுதலில் தான் முத்து மனோ கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து  விசாரிக்காதது ஏன்?

முத்து மனோ படுகொலைக்கு சாதிய பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. முத்து மனோவின் சமூகத்தைச் சேர்ந்த சிங்காரம் என்ற கைதி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி இதே சாதிய பின்னணி காரணமாக, தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, காவல் வாகனத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படுகொலைகளை காவல்துறையினரும், சிறைத்துறையினரும் கண்டும், காணாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றால் அது மிகவும் பயங்கரமானது. எதிர்காலத்தில் தென் மாவட்டங்களின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விடும் அளவுக்கு ஆபத்தானது. அதைத் தடுக்க இத்தகைய கொலைகள் இனியும் நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ படுகொலை செய்யப்பட்டது; அதன் பின்னணி குறித்து விசாரிப்பதற்காகவும், இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை தடுப்பது குறித்து பரிந்துரைப்பதற்காகவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். குறித்த காலத்திற்குள் விசாரணை அறிக்கையை பெற்று, இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆணையத்தின் பரிந்துரைகளையும் செயல்படுத்தி இனி இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். சிறையில் கொல்லப்பட்ட  முத்து மனோவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Palayamkottai Prison Murder PMK Dr Ramadoss Want Investigation 25 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal