அஷ்விந்த் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் எப்போது அவிழும்..? நீதி நிலை நாட்டப்படுமா.? நயினார் நாகேந்திரன் கேள்வி..? - Seithipunal
Seithipunal


தனியார் பள்ளியில் படித்து வந்த அஸ்விந்த் என்ற 07 வயது மாணவனின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கும், அதை மூடி மறைக்க முயற்சித்தவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென தி.மு.க. அரசை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு அதில் குறிப்பிட்டுள்ளதாவது: 

''சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த அஸ்விந்த் என்ற 7 வயது மாணவன் கடந்த ஜூன் 30-ம் தேதி பள்ளியிலேயே மர்மமான முறையில் இறந்துள்ளான். மாணவன் இறந்து இரண்டு நாட்கள் கழித்துதான் பள்ளி கண்காணிப்பாளர் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அந்த மாணவன் இறந்தது எப்படி என்பது குறித்து தி.மு.க. அரசு இதுவரை முறையான விளக்கங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்பது கடும் அதிர்ச்சியளிப்பதோடு மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எப்பொழுதும் போல அன்று காலை மாணவர்களோடு மாணவராக பள்ளி அனுப்பிய வாகனத்தில் பயணித்த அஸ்விந்த் மூக்கு, வாய், கால் ஆகிய இடங்களில் ரத்தக் காயங்களுடன் காயங்களுடன் இறந்தது எப்படி? மாணவனைப் பள்ளி வளாகத்தில் பார்த்ததாகவும், மாணவனுடன் அமர்ந்து மதிய உணவு உண்டதாகவும், உடன் படிக்கும் மாணவர்கள் கூறும் நிலையில் அஸ்விந்த்-க்கு பள்ளி வருகைப் பதிவேட்டில் எதற்காக ஆப்சென்ட் போடப்பட்டது?

வலிப்பு வந்ததாகக் கூறி பெற்றோரின் அனுமதியின்றி அவசர அவசரமாக மாணவனை அரசு மருத்துவமனையில் சேர்த்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோரை சந்திக்காது தப்பியோடியது எதற்காக?

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறு ஒரு திருட்டு வழக்கில் பள்ளியில் உள்ள CCTV உதவியுடன் தான் திருடனைப் பிடித்துள்ளனர். ஆனால் தற்போது பள்ளியில் CCTV-க்கள் இல்லவே இல்லை எனக் கூறுவது எதை மூடி மறைப்பதற்காக?

முறையான கட்டிட வசதிகளின்றி கீழ் தளத்தில் வகுப்புகளும் மேல்தளத்தில் கட்டிட வேலைகளும் நடந்து வரும் இப்பள்ளிக்கு CBSE அங்கீகாரமே இல்லை எனக் கூறப்படுவது உண்மையா? இதுபோன்ற விடைதெரியா பல கேள்விகளை ஆளும் அரசு கடந்த 3 நாட்களாக புறக்கணித்து வருவதைப் பார்த்தால். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் முக்கியப் புள்ளி யாரேனும் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

முறையான அரசு ஒப்புதல் இல்லாமல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கு ஆதரவாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியது யார்? இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் தலையீடு இருப்பது உறுதிபடத் தெரிகிறது. எனவே, அஸ்விந்த் இறந்து போனதன் உண்மை காரணம் என்ன என்பதை மக்களிடையே தெளிவுபடுத்துவது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலையாய கடமை.

மேலும், அநியாயமாக ஒரு பிஞ்சு உயிரைக் காவு வாங்கிய பள்ளியை இழுத்து மூடி சீல் வைப்பதோடு, முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு அஸ்விந்த் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கும், அதை மூடி மறைக்க முயற்சித்தவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். 

இல்லையேல் தமிழக பா.ஜ.க. சார்பாக மிகப்பெரும் அறப்போராட்டங்களை தி.மு.க. அரசு சந்திக்க நேரிடும் என்பதையும், பாதிக்கப்பட்ட பெற்றோரின் பக்கம் சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் நாங்கள் என்றும் துணை நிற்போம் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று நயினார் நாகேந்திரன் அவருடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendran requests the DMK government to uphold justice in the case of a student died mysteriously at a private school in Singampunari


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->