விழுப்புரம் அருகே பயங்கர கார் விபத்து: தடுப்புச் சுவரில் மோதி ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Three Killed in Tragic Car Crash on National Highway Near Viluppuram
மதுரையில் இருந்து சென்னைக்குச் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கார், விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (63). இவர் தனது மனைவி செல்வி (55), மகன் பிரவீன் (30) மற்றும் உறவினர் கவிதா (48) ஆகியோருடன் இன்று (ஜூன் 28) காலை மதுரையில் இருந்து சென்னைக்குக் காரில் புறப்பட்டுள்ளார். காரைப் பாண்டியன் (40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கார் இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்திற்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையே இருந்த நெடுஞ்சாலைத் தடுப்புக் கட்டை (Divider) மீது மிக பலமாக மோதி நொறுங்கியது.
3 பேர் பலி; இருவர் படுகாயம்
இந்தக் கோர விபத்தின் இம்பேக்ட் காரணமாகச் செல்வம், கவிதா மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸார், போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
இவ்விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்த தாய் செல்வி மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகிய இருவரையும் மீட்ட அதிகாரிகள், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தற்பொழுது செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாலும், போலீஸாரின் துரித நடவடிக்கையாலும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Three Killed in Tragic Car Crash on National Highway Near Viluppuram