"ஆட்சி அமைக்க திமுக - அதிமுக இணைந்து குதிரை பேரம்" - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!
Every Day Stalin and Palaniswami Plan to Form Government Minister Nirmalkumar Alleges
மதுரை மேலூரில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தைத் தொடங்கி வைத்த தவெக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் மீது கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளனர். ஆனால், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க.ஸ்டாலின், உதயநிதி, அவரது மாப்பிள்ளை சபரீசன் மற்றும் எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் ஆகியோர் இணைந்து நாள்தோறும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையில்கூட அவர்கள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்துள்ளனர். இவர்களின் இந்தச் சுயநலப் போக்கின் காரணமாகவே, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அந்த அணியின் எம்.எல்.ஏ-க்களைப் போகவிடாமல் தடுத்தது யார்? முந்தைய ஆட்சியில் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரைப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் திமுக மிரட்டியது. தற்போதும் அதே வேலையைச் செய்கிறார்கள். ஆனால், இதற்கு திமுகவின் பல எம்.எல்.ஏ-க்களே உடன்படவில்லை; அவர்கள் விரைவில் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.
முன்னாள் அமைச்சர் மீதான சோதனைகள்
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனைகள் குறித்து விளக்கினார். "முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்த ஊழல்கள் தொடர்பாகக் கிடைத்த மிகத் துல்லியமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சோதனைகளை நடத்தியுள்ளனர். சோதனை நடந்த இடங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களது குடும்பச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், இந்த ஊழல்களை மறைக்கவும் இரு கட்சிகளும் இணைந்து ஜனநாயகப் படுகொலை செய்யத் துணிகின்றன" என்று சாடினார்.
English Summary
Every Day Stalin and Palaniswami Plan to Form Government Minister Nirmalkumar Alleges