தூத்துக்குடியில் பரபரப்பு...! பூட்டிய வீட்டை குறிவைத்து 17 சவரன் நகை சுருட்டல்... ஆட்டோ ஓட்டுநர் சீமான் அதிரடி கைது...!
Thoothukudi 17 sovereigns jewelry stolen from locked house Auto driver Seeman arrested action
தூத்துக்குடியில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் 2 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ராஜா சீனிவாசனின் மனைவி உமாதேவி (61), கடந்த ஜூலை 22-ந் தேதி குடும்பத்தினருடன் சுந்தரவேல்புரத்திற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவும், உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து பீரோவை சோதனை செய்தபோது, அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதனால் உடனடியாக சம்பவம் குறித்து காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தென்பாகம் காவலர்கள், பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
குறிப்பாக சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை நுணுக்கமாக ஆய்வு செய்தபோது, அண்ணாநகரைச் சேர்ந்த நாராயணனின் மகன் சீமான் (38) என்பவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரான சீமானை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தியபோது, தனது இரு நண்பர்களின் உதவியுடன் திருடப்பட்ட நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் கைது செய்யப்பட்ட சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் சீமானுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் தலைமறைவான இருவரை கண்டுபிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதுடன், திருடப்பட்ட நகைகளை முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Thoothukudi 17 sovereigns jewelry stolen from locked house Auto driver Seeman arrested action