தூத்துக்குடியில் பரபரப்பு...! பழைய இரும்பு குடோனில் திடீர் தீ விபத்து...! - பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்
There commotion Thoothukudi sudden fire broke out old iron warehouse Goods worth several lakhs rupees destroyed
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால், குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் டேவிட்ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் குடோன் செயல்பட்டு வருகிறது.இந்த குடோனின் பின்புற பகுதியில் பழைய பைபர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்புச் சாமான்கள், வாகனங்களின் பழைய டயர்கள் உள்ளிட்டவை அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் திடீரென தீப்பற்றியது.குடோனில் குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவி, சிறிது நேரத்திலேயே கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வானத்தை நோக்கி எழுந்த கரும்புகையை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இருதரப்பினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அருகில் இருந்த பகுதிகளுக்கு தீ பரவும் அபாயம் தவிர்க்கப்பட்டது.எனினும், அதற்குள் குடோனில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆறுமுகனேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடோனில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
There commotion Thoothukudi sudden fire broke out old iron warehouse Goods worth several lakhs rupees destroyed