“இதோ இதுதான் காரணம்!” – சூட்கேஸை தூக்கிக் காட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பரந்தாமன்.. மதுராந்தகம் பிரச்சாரத்தில் பரபரப்பு!
Here this is the reason DMK candidate Paranthaman canvassed for votes by lifting and displaying a suitcase a stir during the Maduranthakam campaign
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமன் சூட்கேஸ் ஒன்றை கையில் தூக்கிக் காட்டி, “இதற்காகத்தான் இங்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது” எனக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சம்பவம் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் செயல்பாடுகளை விமர்சித்து சூட்கேஸை கையில் தூக்கிக் காட்டியுள்ளார்.
பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் பேசிய பரந்தாமன், “மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. உலகத்தில் எந்த மாநிலத்திலாவது இதுவரை இப்படி நடந்திருக்கிறதா? இங்கு இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் இந்தப் பெட்டிதான்” என்று கூறி தான் கையில் வைத்திருந்த சூட்கேஸைக் காட்டினார்.
தொடர்ந்து, “இங்கே ஒரு அம்மையாரைத் தேர்ந்தெடுத்து நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். ஆனால் 20 நாளில் அவர் ராஜினாமா செய்துவிட்டார். 20 நாளில் ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம்? யார் காரணம்? யாரையாவது அந்த அம்மா கேட்டார்களா? இந்த மதுராந்தகம் மக்கள் எல்லாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பினார்களே, உங்களைக் கேட்டார்களா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “உங்களுடைய வாக்கு எவ்வளவு விலைமதிப்பற்ற வாக்கு. ஒரு நபருக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது ஒரு பெரிய பதவி. கோடிக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 234 பேர்தான் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திற்குச் செல்கிறார்கள்” என்று பரந்தாமன் தெரிவித்தார்.
தொடர்ந்து, மக்கள் அளித்த வாக்கை மதிக்காமல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். “அப்படிப்பட்ட பெரும் வாய்ப்பைக் கொடுத்த நீங்கள், உங்களுடைய வாக்கை மதிக்காமல், உங்களை உதாசீனப்படுத்தி, உங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ராஜினாமா செய்தது என்பது இந்த மதுராந்தகம் தொகுதி மக்களை கேலிக்கு உள்ளாக்கியது என்று நான் சொல்லவில்லை, சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது” என்றார்.
மேலும், “அந்த அம்மா எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுடைய விரலில் இருக்கக்கூடிய மை காய்வதற்கு முன்னால் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட்டார் என்றால் அதற்கு என்ன காரணம்? இதோ இதுதான் காரணம். இந்தப் பெட்டிதான் காரணம்” எனக் கூறி மீண்டும் சூட்கேஸை காட்டினார்.
“எம்எல்ஏ பதவியை விட இதுதான் பெரிதாக அவர்கள் நினைத்து, உங்களையெல்லாம் மதிக்காமல், உங்களிடத்தில் எதையும் கேட்காமல் இன்றைக்கு அந்த அம்மையார் உங்களிடத்திலே வாக்குகளைக் கேட்டு வருகிறார். இது எப்படிப்பட்ட நயவஞ்சகத்தனம்? இது எப்படிப்பட்ட துரோகம்?” என்றும் பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.
அதேநேரத்தில், தாம் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு முழுநேரமும் பணியாற்றுவேன் எனவும் அவர் உறுதியளித்தார். “இந்த துரோகத்தை ஒருபோதும் இந்த பரந்தாமன் செய்யமாட்டான். இந்த துரோகத்தை ஒருபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் செய்யாது. உங்களுக்காகப் பணியாற்றுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தால், முழுவதுமாக மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு நான் இருந்து முழுநேரமும் பணியாற்றுவேன் என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் உத்தரவாதமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பரந்தாமன் கூறினார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், சூட்கேஸை கையில் தூக்கிக் காட்டி திமுக வேட்பாளர் பரந்தாமன் மேற்கொண்ட இந்தப் பிரச்சாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Here this is the reason DMK candidate Paranthaman canvassed for votes by lifting and displaying a suitcase a stir during the Maduranthakam campaign