தமிழகத்தில் 05 தொடக்கம் 17 வயதுடைய பள்ளி மாணவர்களின் ஆதார் 'பயோ மெட்ரிக்' புதுப்பிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு..! - Seithipunal
Seithipunal


மாணவ, மாணவிகளின் நலனுக்காக 01-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும், இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகிறது. 

இந்த உதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் மூலம், பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு மாணவ மாணவியருக்கு உதவித்தொகையை நேரடி பரிமாற்றம் செய்வதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம். அதன்படி, மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகும். ஆகையால், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கட்டாய பயோமெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை பெறவேண்டியது அவசியமாகியுள்ளது.

இப்பணியை அஞ்சல் துறையுடன் இணைந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுள்ள நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் 05 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள், 01-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களுள் 05 முதல் 07 வயதுக்குட்பட்டவர்கள், முதன்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும். மேலும், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது முறை கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையில் பயின்றுவரும் 05 முதல் 07 வயதுக்குட்பட்ட சுமார் 08 லட்சம் மாணவர்களுக்கும், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 07 லட்சம் மாணவர்களுக்கும் என மொத்தம் 15 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இதனிடையே, கடந்த ஆண்டு ”பயிலும் பள்ளியிலேயே ஆதார்” திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநரை பதிவாளராகவும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தை முகவராகவும் கொண்டு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே முகாம் அமைத்து, அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்கும் பணிகளை கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் சேர்த்து மாணவ, மாணவிகளுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்வது எளிதானது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. 

அதன்படி, அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, அஞ்சலக பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்.

இப்பணியானது நடப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி டிசம்பர் மாதத்திற்குள் 02 கட்டங்களாக நடத்தி முடிக்கத் திட்டம் வகுத்துள்ளனர். இதன் மூலம் 05-07 மற்றும் 15-17 வயதிற்குட்பட்ட சுமார் 15 லட்சம் மாணவர்களின் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் விவரம் புதுப்பித்தலை மேற்கொள்ள இயலும். 

எனவே, பள்ளி கல்வித் துறையின் கீழ் பயின்றுவரும் 5-7 மற்றும் 15-17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணியினை, இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து, அஞ்சலக பணியாளர்கள் மூலம் மேற்கொள்வதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இயக்குநர் அரசை அனுமதி கோரியுள்ளார். இதனை ஏற்று, மாணவர்களுக்கான ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணியினை, இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து மேற்கொள்ள அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The School Education Department has ordered that the Aadhaar biometrics of school students aged 5 to 17 in Tamil Nadu must be updated


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->