குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்குப் பின் கருவுற்ற பெண்; 03 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்துச் செய்துள்ள உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு கருவுற்ற பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யாசின் என்பவரது மனைவி ரிஹானா, இவர்களுக்கு 03 குழந்தைகள் உள்ளனர். இதனால், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் ரிஹானா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு ரிஹானா மீண்டும் கருவுற்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ரிஹானாவின் கணவர் இறந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் தான் கருவுற்றதாகவும், தற்போது கணவரையும் இழந்து தவிப்பதால் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி ரிஹானா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகும் கருவுற்று நான்காவதாக குழந்தை பெற்றுக்கொண்ட மனுதாரருக்கு ரூ.3 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், நான்காவது குழந்தையின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சுகாதாரத் துறை, ஆற்காடு அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், ‘குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில் 0.5 சதவீதம் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதுதொடர்பாக மனுதாரரிடம் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்ற பிறகே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை தோல்வியுற்று மீண்டும் அவர் கருவுற்ற நிலையில், அதை நாங்களே அகற்றுகிறோம் எனக் கூறியும், மனுதாரர் ஏற்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், அரசு உத்தரவுப்படி குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் ரூ. 60 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''கணவரை இழந்த நிலையில் தனி ஆளாக நான்கு குழந்தைகளையும் மனுதாரர் வளர்க்க சிரமப்படுவார் என்ற தனி நீதிபதியின் அனுதாபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதை அரசு மருத்துவர்களின் கவனக்குறைவு என எடுத்துக்கொள்ள முடியாது.

குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை தோல்வியடைந்தால் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், நான்காவது குழந்தையின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவு ஏற்புடையதல்ல என்பதால் அதை ரத்து செய்கிறோம்.

மேலும் அரசு உத்தரவுப்படி ரூ.60 ஆயிரத்தை மனுதாரருக்கு 4 வாரங்களில் வழங்க வேண்டும். ஒருவேளை மனுதாரர் கூடுதல் இழப்பீடு கோர விரும்பினால் அதுதொடர்பாக 8 வாரங்களில் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.''என அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court has set aside the order directing the payment of compensation to a woman who conceived after undergoing a family planning procedure


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->